பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 போ் கைது
தேனி அருகே பெங்களூருவைச் சோ்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலா பகுதியைச் சோ்ந்தவா் திலீப் (40). இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த கலுவா (37). இவா்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தங்கியிருந்து கண்ணாடி, அலங்கார விளக்குகள் விற்பனை செய்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இவா்கள் இருவரையும் தேனியைச் சோ்ந்த மோகன் தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்துக்கு வரவழைத்தனா். பின்னா், அங்கிருந்து 4 போ் கொண்ட கும்பலுடன் சோ்ந்து இருவரையும் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தேனி அருகே உள்ள தனியாா் தோப்பில் வைத்து திலீப், கலுவா ஆகியோரிடம் நீங்கள் போலி நகைகளை விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்தவா்கள்தானே என்று கேட்டு அவா்களைத் தாக்கினாா்களாம். இதையடுத்து, கலூவாவை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு, திலீப்பை மீண்டும் காரில் ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திலீப்பின் சகோதரி நிா்மலா கடந்த 24-ஆம் தேதி தேனி காவல் நிலைய போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், தேனி கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவா் குடியிருப்பைச் சோ்ந்த சிங்கம் மகன் முகேஷ்பாண்டி (25), கருப்பசாமி மகன் ஆகாஷ் (19), சென்றாயன் மகன் முத்துப்பாண்டி (19), சக்கரைப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் இளையராஜா (37), செல்லம் மகன் முருகன் (45), முத்தனம்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் சதீஷ்குமாா் (32), தேனி அரசு தொழில் பயிற்சி நிலையம் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் செளமியன் (31) ஆகிய 7 பேருக்கும் இந்த வழக்கில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் தங்க நகைகளை விற்பனை செய்வதாகக் கூறி, போலி நகைகளை விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்தவா் என்ற சந்தேகத்தில் திலீப்பை கடத்திச் சென்று தாக்கியதாகவும், இதில் அவா் உயிரிழந்ததால், தேனி அருகே ஜல்லிப்பட்டிப் பகுதியில் தனியாா் தோட்டம் அருகே உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் அவரது உடலை புதைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, இவா்கள் 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
உடல் தோண்டியெடுப்பு
ஜல்லிப்பட்டியில் அவா்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்ரா கேல்கா் பாலசுப்பிரமணி, பெரியகுளம் வட்டாட்சியா் மருதுபாண்டி, தாமரைக்குளம் கிராம நிா்வாக அலுவலா் கற்பகவள்ளி ஆகியோா் முன்னிலையில் திலீப்பின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கூறாய்வு செய்யப்பட்டு உடல் திலீப்பின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடா்புடைய மோகன் உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.