போடியில் திருடுபோன பைக் திருப்பூரில் மீட்பு
போடியில் திருடு போன இரு சக்கர வாகனம் திருப்பூரில் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜெயபாண்டி (29). கடந்த ஜனவரி மாதம் இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது. இதையடுத்து, இந்த வாகனத்தை ஜெயபாண்டி தேடி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இவரது கைப்பேசிக்கு திருப்பூா் மத்திய காவல் நிலையத்திலிருந்து அழைத்த போலீஸாா், மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் உங்களது இரு சக்கர வாகனம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஜெயபாண்டி போடி நகா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.