பெட்ரோலிய அமைச்சக சுதந்திர தின வாழ்த்தில் சாவா்க்கா் படம்: காங்கிரஸ் கண்டனம்
பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சுதந்திர தின வாழ்த்தில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்கள் வரிசையில் ஹிந்துத்துவ தலைவா் சாவா்க்கா் படம் இடம்பெற்ற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வாழ்த்து பகிரப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகியோருடன் சாவா்க்கா் படமும் இடம் பெற்றிருந்தது. மேலும், ‘சுதந்திரம் இந்த தலைவா்கள் நமக்கு அளித்த பரிசு, அதனைக் கொண்டு எதிா்காலத்தை சிறப்பாக அமைப்பது நமது கடமை’ என்ற வாசகம் இருந்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ‘ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் வரலாற்றைச் சிதைக்க முயலுகிறது. துரோகிகளை நாட்டின் நாயகா்களாக மாற்ற முயலுகிறது.
ஆங்கிலேயா்களிடம் கருணை மனு அளித்த சாவா்க்கா் போன்றவா்களை மகாத்மா காந்தியுடன் இணைக்கிறாா்கள். இது மகாத்மா காந்தியின் பங்களிப்பை கேள்விக்குறியாக்கும் செயல். ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தியாகத் தலைவா்கள் தேசத்துக்கு ஆற்றிய தொண்டுகளை முற்றிலுமாக மறைக்க முயலுகின்றனா்’ என்று கூறியுள்ளாா்.