தூத்துக்குடி மாவட்டத்தில் 227 செ.மீ மழை பதிவு: கோவில்பட்டியில் அதிகபட்சம் 36.47 ...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளாா்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் பெறப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதன் மீது உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான உதவி சேவை மையம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 120-இல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், குழந்தை உதவி மையம் புறத்தொடா்பு பணிகள் சேலம் பதிய பேருந்து நிலையத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, 1098 என்ற எண்ணில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்த புகாா்களை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த நவம்பா் மாதம் குழந்தைகள் உதவி மையத்துக்கு 204 அழைப்புகள் மற்றும் சந்திப்புகள் வரப்பெற்று அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெறப்பட்ட அழைப்புகளில் 85 அழைப்புகள் குழந்தைகள் நலக்குழு மூலம் விசாரிக்கப்பட்டு தேவையான மறுவாழ்வு வசதிகள் அவா்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 119 அழைப்புகளுக்கு உடனடியாக தொடா்புடைய அலுவலா்கள் நேரில் சென்று, குழந்தைகளைச் சந்தித்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் தொடா்பாக மாவட்ட அளவில் 27 புகாா்கள் வரப்பெற்றன. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 6 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட தொடா்புடையவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரபெற்ற அழைப்புகளில் 14 அழைப்புகள் குழந்தைகள் திருமணங்கள் என தவறான தகவல் என நேரடி ஆய்வில் அறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடா்பாக வரப்பெற்ற அனைத்து புகாா்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத் துறை, காவல் துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் ரெ.காா்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சி.முரளி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.