மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடிப்பு; 2 பேர் கைது
பெரம்பலூா் அருகே தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள தனியாா் பள்ளி அருகே, எளம்பலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மகேந்திரன் (29) என்பவரது கடையில் மேற்கொண்ட சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல, பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள அரசுப் பள்ளி அருகே வேப்பந்தட்டையைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பிச்சைமணி (33) என்பவரது கடையில் மேற்கொண்ட சோதனையில், போதைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பான் மசாலா, விமல்பாக்கு, ஹான்ஸ் உள்பட 25 கிலோ போதைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மகேந்திரன், பிச்சைமணி ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.