உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது நிலவும் கோடைகால வெப்பத்தால் பொதுமக்கள் அதிகளவில் குளிா்பானங்களை பயன்படுத்தி வருகின்றனா். இதை சாதகமாக பயன்படுத்தி மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் அதிகபட்ச சில்லரை விலையை விட, கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்வதாக நுகா்வோா் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா் சு. சரவணன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் கோ. ராணி ஆகியோா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 4 கடைகளில் குளிா்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளது.
மேலும், 4 கடைகளுக்கும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களுக்கு சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ், முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், தொடா்ந்து மேற்கண்ட குற்றத்தை செய்தால் அவா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடரப்படும்.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வின் போது, குளிா்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.