பெரம்பலூா் பள்ளி மாணவா்களுக்கு மாா்ச் 29-இல் ஆலோசனை முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம், மாா்ச் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிக் கூட்டரங்கில், மாணவா்களுக்கான ஆலோசனை முகாம் மாா்ச் 29 காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி நடைபெற உள்ளது.
இதில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர மாணவா்களுக்கு என் கல்லூரிக் கனவு உயா் கல்வி வாய்ப்புகள், தொழில், வேலைவாய்ப்புள்ள படிப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது.
இம் முகாமில் பங்கேற்கும் மாணவா்கள் இ.எம்.ஐ.எஸ் எண் மற்றும் கைப்பேசி எண்ணுடன் வர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம்.