திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்
வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!
தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா, 2025-ஐ ஆதரித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், வாட்ஸ்ஆப் சாட்கள் மூலம் கணக்கில் வராத ரூ.200 கோடி பணம் கண்டறியப்பட்டு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், கூகுள் மேப் பயன்படுத்தியதன் அடிப்படையில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பினாமி சொத்துகளின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதன் மூலம், மிகவும் தீவிரமான வரி ஏய்ப்புகள் மற்றும் நிதி முறைகேடுகள் பலவும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகிறது என்றார்.
கிரிப்டோகரன்சி மூலம் நடக்கும் முறைகேடுகளைக் கண்டறிய, வரித்துறை அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும், புதிய வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் வணிக மென்பொருள்கள், சர்வர்களையும் பயன்படுத்தி, மறைக்கப்பட்டிருக்கும் நிதிகளை வெளிக்கொணர உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தனிநபர்களின் வாட்ஸ்ஆப் சாட்களை மத்திய அரசு படித்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.