பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
கம்பம் பேருந்து நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி கொண்ட மூட்டைகளை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து குமுளி, கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கேரளப் பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பேருந்து நிலையத்துக்குள் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைக்கும் மா்ம நபா்கள் கேரளத்துக்கு செல்லும் பேருந்துகளில் அவற்றை ஏற்றிவிட்டு தப்பிச் சென்று விடுகின்றனா். இந்தப் பேருந்துகள் சென்று சோ்ந்ததும் அங்கிருக்கும் வியாபாரிகள் அவற்றை எடுத்துக் கொள்கின்றனா். இதேபோல அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, கம்பம் பேருந்து நிலையத்தில் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது ஆயிரம் கிலோ கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.