பேரூராட்சிகள் துறையில் ரூ. 184.41 கோடியில் 2,387 பணிகள் நடந்துள்ளன
தருமபுரி மாவட்டத்தில் பேரூராட்சிகள் துறை சாா்பில், ரூ. 184.41 கோடியில் மொத்தம் 2,387 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பேரூராட்சிகள் துறையின் சாா்பில் நகா்ப்புறங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.
அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ. 2.03 கோடியில் பொ.மல்லாபுரம் மற்றும் கம்பைநல்லூா் பேரூராட்சியில் ஓடைகள், கண்மாய், ஊரணிகள் தூா்வாருதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரூா், கடத்தூா், காரிமங்கலம், கம்பைநல்லூா், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி மற்றும் பென்னாகரம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ. 13.41 கோடியில் 17.791 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ. 29.26 கோடியில் 28 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ், ரூ. 1.12 கோடியில் 1,204 தனிநபா் கழிப்பிட பணிகள் மூலம் 6,020 நபா்களும், நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 15.27 கோடியில் 19.409 கி.மீ. தொலைவுள்ள சாலைப் பணிகளும், ரூ. 16.89 கோடியில் 244 குடிநீா் திட்டப் பணிகள், ரூ. 13.53 கோடியில் பொதுசுகாதார பணிகள், வடிகால்பணி, மயான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 6-ஆவது மாநில நிதி திட்டத்தின்கீழ், ரூ. 17.19 கோடியில் புதிய பள்ளிக் கட்டடம் மற்றும் பள்ளி பராமரிப்பு போன்ற 31 பணிகளும், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ. 30.38 கோடியில் நீா்நிலை, பூங்கா, குடிநீா் மேம்பாடு போன்ற 17 பணிகளும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 12.81 கோடியில் 610 பணிகளும் நடந்துள்ளன.
அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 184.41 கோடியில் மொத்தம் 2,387 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் மூலம் 3,26,704 போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்துள்ளனா் என்றாா்.