பொது நிகழ்ச்சிகளில் சமந்தா கண்கலங்க காரணம் என்ன தெரியுமா?
நடிகை சமந்தா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தன் கண்கள் கலங்குவது குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என கடந்த சில ஆண்டுகளாகவே சமந்தா நடிப்பில் பெரிதாக எந்தப் படமும் வெளியாகவில்லை.
ஆனாலும் தென்னிந்திய ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்குள்ள நடிகையாகவே நீடிக்கிறார். முக்கியமாக, தமிழ் ரசிகர்கள் சமந்தாவை மீண்டும் தமிழ்ப் படங்களில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
அண்மை காலமாக, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சமந்தா யாராவது பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் கலங்க அமர்ந்திருப்பார். முதலில் இது உணர்வுப்பூர்வமான விஷயமாகப் பார்க்கப்பட்டாலும் தொடர்ந்து சில நிகழ்வுகளில் சமந்தாவின் கண்கள் கலங்க இதுகுறித்து புரளிகள் எழுந்தன.
இந்த நிலையில், விடியோ மூலம் இதற்கு விளக்கமளித்த சமந்தா, “அதிக வெளிச்சமுள்ள ஒளியமைப்பில் எனது கண்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால், எனது உணர்திறன் மிகுந்த கண்களிலிருந்து அடிக்கடி கண்ணீர் கசிகிறது. அதற்காகத்தான் கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கிறேனே தவிர வேறு எந்த எமோஷனல் காரணமும் இல்லை. நான் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 படத்திற்காக மோகன்லாலைச் சந்தித்த நெல்சன்!