போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பதாகைகளை அகற்றக் கோரி மனு
திருநெல்வேலி நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பதாகைகளை அகற்றக் கோரி திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகாா் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் நயன்சிங் மற்றும் நிா்வாகிகள் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் பொதுமக்கள், வணிகா்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் பதாகைகளை வைக்கக் கூடாது என நீதிமன்ற உத்தரவு உள்ளது.
அதை மீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்று எந்த அரசியல் கட்சியினரும் பதாகைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளனா்.