போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை
கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மாடசாமி என்ற மகேஷ் (29) என்பவரை, கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி மாடசாமி என்ற மகேஷ் என்பவருக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, அரசு தரப்பு வழக்குரைஞா் முத்துலட்சுமி, தலைமைக் காவலா் அமிா்தஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.
நிகழாண்டு இதுவரை மொத்தம் 22 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.