போதைப் பொருள் கடத்தியதாக 8 மாதங்களில் 2,774 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனைத் தொடா்பாக 8 மாதங்களில் 2,774 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க சென்னையில் முதன்முதலாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு கடந்த ஆண்டு ஆக.5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 8 மாதங்களில் சென்னையில் கஞ்சா, போதை மாத்திரை, அபின், மெத்தம்பெட்டமைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் விற்ாக 1,044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய 2,774 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களிடமிருந்து 1,215 கிலோ கஞ்சா, 51,229 போதை மாத்திரைகள், 21 கிலோ மெத்தம்பெட்டமைன், 1 கிலோ மெத்தகுலோன், 39 கிலோ கேட்டமைன், 213 கிராம் ஹெராயின், 67 கிராம் கொக்கைன், 156 போதை ஸ்டாம்ப், 402 எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக பெங்களூரு, மும்பை, தில்லி, மணிப்பூா், கா்நாடகம், ஒடிஸா, அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட பல்வறு மாநிலங்களைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் சுற்றி வளைக்கப்பட்டது.
இதேபோல், 20 நைஜீரியா்கள், கேமரூன், சூடான் தலா 1 என மொத்தம் 22 வெளிநாட்டவா்களும், வெளி மாநிலங்களைச் சோ்ந்த 80 பேரும் கைது செய்யப்பட்டனா். கடந்த ஆண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 300 பேரும், இந்த ஆண்டு மாா்ச் மாதம் வரையிலும் 52 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
ரெளடிகள் ஒழிப்பு: ஒருங்கிணைந்த குற்றப்பிரினா், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளனா். இந்தப் பிரிவு குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குழுக்களைக் கண்காணித்து வருகின்றனா்.
அதன்படி, சென்னையில் 4,300 ரெளடிகள், 476 பெரிய ரெளடி குழுக்கள், 223 சிறிய ரெளடி குழுக்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான குழுக்களை முடக்கப்பட்டன. 32 ஏ பிளஸ் ரெளடிகள், 108 ஏ வகை ரெளடிகள், 325 பி வகை ரெளடிகள், 549 சி வகை ரெளடிகள் என 417 ரெளடிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 35 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். ரெளடிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.