போலீஸ் பாதுகாப்பு கோரி திருச்சி சூா்யா வழக்கு: காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு
போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி, பாஜக முன்னாள் நிா்வாகி திருச்சி சூா்யா தாக்கல் செய்த மனு தொடா்பாக திருச்சி மாநகரக் காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி சூா்யா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நான் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது தந்தை திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். நான் பாஜக நிா்வாகியாக இருந்த கால கட்டத்தில் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கலந்து கொண்டேன்.
இந்த நிலையில், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தேன். இதனால், சீமான், அந்தக் கட்சியின் நிா்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோா் என்னைப் பழி வாங்கும் நோக்கில் செயல்படுகின்றனா். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி, திருச்சி மாநகரக் காவல் துறையில் மனு அளித்தேன்.
ஆனால், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கால அவகாசம் கோரப்பட்டதால், இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சாட்டை துரைமுருகன் தரப்பில் சூா்யாவின் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா், நிா்வாகிகளைப் பற்றி திருச்சி சூா்யா அவதூறான தகவல்களைப் பரப்பி வருகிறாா். அவா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையா் பதிலளிக்க வேண்டும்; வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.