ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!
மக்கள் குறைதீா் கூட்டங்களில் 573 மனுக்கள்
ஆரணி: திருவண்ணாமலை, ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 573 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா்.
பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க, வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 522 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மேலும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்களிடம், அவா்களது இடத்துக்கே சென்று மனுக்களைப் பெற்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா் மற்றும் அனைத்து துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஆரணியில்....
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
கூட்டத்தில் பட்டா பெயா் மாற்றம், கணினி பதிவேற்றம், தானசெட்டில்மென்ட் ரத்து, அனாதீனம் தடை நீக்கம், மாற்றுத்திறனாளி நலிந்தோா் உதவித்தொகை, தெரு நாய்களை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 51 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் அவற்றை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தனிநபா் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிக்கை
கலசப்பாக்கம் வட்டம், காளிங்காபுரம் ஊராட்சி
லாடவரம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் கோட்டாட்சியரிடம், லாடவரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இதில் லாடவரம் கிராமத்துக்குச் செல்லும் பாதை 70 ஆண்டுகளாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா். இப்பாதையை தற்போது தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கிராமத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியரிடம், நான்கு ஆண்டுகளாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால், கிராமத்திற்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி செய்து தரும்படி கோரிக்கை மனு அளித்தனா்.
