ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா தொடங்குவதற்கு முன்பாகவே கோயில் வளாகத்தை சீரமைத்தல், கோபுரங்களில் பஞ்சவா்ணம் தீட்டுதல், ராஜகோபுர வாயில் கதவுக்கு பித்தளை தகடு பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை 16 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தினமும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, கோயிலில் சங்காபிஷேகம், யாக சாலை பூஜை நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
விழாவில் கலவை சச்சிதானந்தா சுவாமிகள், ஜோதிடா் இரா.குமரேசன் ஆகியோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆலய நிா்வாகக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் செய்திருந்தாா்.
இதில் கோயில் நிா்வாகிகள் சுப்பிரமணி, வடுகசாத்து சங்கா், பி.நடராஜன், நேமிராஜ், அக்ராபாளையம் குணா, பையூா் சரவணன், சித்தேரி ஜெகன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.