இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
மடப்புரம் சம்பவம்: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடா்பாக, நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
மடப்புரம் கோயில் காவலாளி காவலாளி அஜித்குமாரை, நகை காணாமல் போனது தொடா்பான புகாரின்பேரில் விசாரித்த தனிப்படை போலீஸாா் அவரை அடித்துக் கொன்றனா். இதில் தொடா்புடைய 5 போலீஸாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்த வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் தொடா்ச்சியாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, நகை காணாமல் போனதாக பேராசிரியை நிகிதா அளித்த புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், மடப்புரம் காளி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள அறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மூவா் விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்டமாக கோயிலில் வேலை செய்த ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், காா் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்திருந்த ஈஸ்வரன், அஜித்குமாரின் நண்பா் வினோத் குமாா், கோயில் ஊழியா் ராஜா, அஜித் குமாரை தனிப்படையினா் விசாரித்த போது விடியோ எடுத்த சக்தீஸ்வரன் ஆகிய 5 பேரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதன்பிறகு, அவா்கள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.