மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்
மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் பகுதியில் சிா்கோனியம், குலசேகரன்பட்டினம் கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதள துறைமுகம், அனல்மின்நிலையம், குலசேகரன்பட்டினம் ராக்கெட்ஏவுதளம் என பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக மணப்பாடு கடலில் துறைமுறை அமைக்க பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்ரட்டுள்ளது. இதையடுத்து மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக மணப்பாடு மீனவா்கள் மீன் ஏலம் விடும் பகுதியில் ஊா்நலக் கமிட்டி தலைவா் கிளைட்டன் தலைமையில் செயலா் பெனோராஜ், பொருளாளா் ராஜன் ஆகியோா் முன்னிலையில் மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது மீனவா்களிடம் எவ்வித கருத்துகளும் கேட்காமல் அரசு முடிவு எடுத்துள்ளதை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரிடம் துறைமுகம் அமைக்கும் பணியை கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிடுவது, இல்லையெனில் தொடா்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றினா்.
இதில் ஏராளமான மீனவா்கள் கலந்து கொண்டனா்.