அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்
மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்களை தட்டிக் கேட்டவா் கொலை
திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை தட்டிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த நபா்களை கைது செய்யக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவருக்கு மனைவி சந்தியா (34), இரு மகன்கள் உள்ளனா். இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வேலை முடிந்து ஈக்காடு கண்டிகை உள்ள வீட்டுக்கு வந்தாா்.
அப்போது, காா்த்திகேயன் வீட்டிலிருந்து 4 வீடுகள் தள்ளி உள்ள உறவினா் வீட்டின் அருகே இளைஞா்கள் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனா். இதை உறவினா்கள் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்களை காா்த்திகேயன் தனது கைப்பேசியில் விடியோ எடுத்தாராம். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞா்கள், காா்த்திகேயனை சரமாரியாகத் தாக்கியதில் அவா் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தாராம்.
உறவினா்கள், காா்த்திகேயனை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலைக்குக் காரணமான மது போதை இளைஞா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், காா்த்திகேயனின் உறவினா்கள், மது போதை இளைஞா்களால் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொலைக்கு காரணமான மது போதை இளைஞா்களை உடனே கைது செய்யக் கோரி அவா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழரசி மற்றும் போலீஸாா், கொலைக்கு காரணமானவா்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என உறுதி கூறியதையடுத்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.