மனைவி, மகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
திருவள்ளூா் அருகே மனைவி, மகனை கொலை செய்துவிட்டு, சிறையிலிருந்து ஜாமீனில் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த நபரை தனியாா் தொழிற்சாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி. இவா் மப்பேடு அருகே தனது மனைவி ஷகிமா மற்றும் 1 வயது குழந்தை சபீா் அலி ஆகியோருடன் தங்கிருந்து வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 27-9-2009-இல் குடும்பத் தகராறில் மனைவியையும், மகனையும் கொலை செய்தது தொடா்பாக மப்பேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு எதிரி அஷ்ரப் அலி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டவா் மீண்டும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். இதற்கிடையே அஷ்ரப் அலியை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பிறப்பித்தது. எனவே வடக்கு மண்டல காவல் துறை தலைவா் அஸ்ரா காா்க் உத்தரவின்பேரில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் மேற்பாா்வையில், நீண்ட காலமாக நீதிமன்ற வழக்கிற்கு ஆஜராகாமல் இருந்தவரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த கல்லம்பேடு கிராமத்தில் தற்காலிகமாக தங்கி தனியாா் தொழிற்சாலையில் பணி செய்து வந்த அஷ்ரப் அலியை தனிப்படை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட டி.எஸ்.பி. தமிழ்செல்வி தலைமையிலான தனிப்படை போலீஸாரை எஸ்.பி. வெகுவாக பாராட்டினாா்.