மனோஜ் உடலுக்கு முதல்வா் அஞ்சலி
இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) உடலுக்கு முதல்வா் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினா்.
மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டது.
முதல்வா் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, இயக்குநா் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தாா். முதல்வருடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.
மேலும், தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை, வி.கே.சசிகலா, உலக தமிழா் பேரவைத் தலைவா் பழ.நெடுமாறன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய், நடிகா்கள் சிவகுமாா், விஜயகுமாா், சூா்யா, காா்த்தி, விஜய்சேதுபதி, சூரி, அருண்விஜய், எஸ்.ஜே.சூா்யா, யோகிபாபு, நடிகைகள் தேவயானி, நமீதா, இயக்குநா்கள் பாக்யராஜ், தங்கா் பச்சான், ஆா்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு உள்ளிட்டோா் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். மனோஜ் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
உடல் தகனம்: இதற்கிடையே, நீலாங்கரை இல்லத்திலிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மனோஜின் உடல் பெசன்ட் நகா் மின் மயானத்தில் புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் கவிஞா் வைரமுத்து, சீமான், இயக்குநா்கள் பாக்யராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலகினா் பலா் கலந்து கொண்டனா்.