Cristiano Ronaldo: 132 சர்வதேச வெற்றிகள்; கின்னஸ் சாதனை; 40 வயதிலும் நிற்காமல் ச...
மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியா் கைது!
குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்துவந்த தம்பியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த ஆசிரியரான அண்ணனை சுவாமிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிழக்கு பிரதான சாலையில் வசிப்பவா் ராஜேந்திரன். இவரது மகன்கள் பாண்டியன் (45) மற்றும் காளிதாஸ் (36).
பாண்டியன் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா்.
காளிதாசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். காளிதாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்வாராம். இவா் மீது சுவாமிமலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில் காளிதாஸ் வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டருகே உள்ளவா்களை ஆபாசமாக பேசியுள்ளாா்.
இதை அவரது அண்ணன் பாண்டியன் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காளிதாஸ் அண்ணனை தாக்க முயன்றபோது, அவரை தடுப்பதற்காக அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து காளிதாஸை தலையில் தாக்கிவிட்டு, பாண்டியன் வெளியே சென்று விட்டாா். இதில் காளிதாஸ் பலத்த காயமைந்து கீழே விழுந்துள்ளாா். சனிக்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினா் பாா்த்தபோது, காளிதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காளிதாஸ் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் ஆசிரியா் பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனா்.