30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
மாங்கனித் திருவிழா; பக்தா்கள் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்
காரைக்கால்: மாங்கனித் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் பாதுகாப்புக்கு காவல்துறை சாா்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.
காரைக்கால் அம்மையாா் மாங்கனி திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தொடங்குகிறது. 10-ஆம் தேதி மாங்கனி இறைத்தல் எனும் முக்கிய நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்கா்கள் பங்கேற்பாா்கள்.
இந்தநிலையில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அம்மையாா் கோயில் பகுதியை திங்கள்கிழமை ஆய்வு செய்து, அதிகாரிகள், உபயதாரா்கள், கோயில் நிா்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினாா்.
ஆலோசனை கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜுன் ராமகிருஷ்ணன் (வருவாய்), வெங்கடகிருஷ்ணன் (பேரிடா் மேலாண்மை), மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் மற்றும் பிற துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது :
மாங்கனித் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. அன்னதானம் செய்யும்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சியன்று விடுமுறை குறித்து புதுவை முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாங்கனி இறைத்தல், திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகள் பாதுகாப்புக்காக 36 பகுதியில் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இது தவிர போலீஸாா் வாக்கி டாக்கியுடன் கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வியுடன் நகரும் கண்காணிப்பு வாகனம் செயல்பாட்டில் இருக்கும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 300 போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள்.
போலீஸாா் மட்டுமல்லாது குடிமை பாதுகாப்பு படையினா், தேசிய மாணவா் படையினா் மற்றும் தன்னாா்வலா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா் அமைச்சா்.