மாணவா்களுக்காக கூடுதலாக பிஆா்டிசி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் மாணவா்களுக்கு திங்கள்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது:
புதுச்சேரியில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வி நிலையங்களில் காரைக்காலைச் சோ்ந்த சுமாா் 800 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இவா்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு புதுச்சேரிக்கு திங்கள்கிழமை அதிகாலையில் செல்ல பிஆா்டிசி பேருந்தில் பயணிக்க முயன்றால், ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே, திங்கள்கிழமை காலை வேளையில் புதுச்சேரிக்கு அதிகபட்சம் 3 பேருந்துகள் இயக்க வேண்டும்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவி ஏறக்குறைய ஓராண்டாகிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஸ்கேன் இயக்க தொழில்நுட்பவியலாளா் தேவையிருக்கிறது. ஒரே நேரத்தில் வாங்கப்பட்ட எம்ஆா்ஐ ஸ்கேன் புதுச்சேரியில் செயல்படத் தொடங்கிவிட்டது. காரைக்காலில் மட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
காரைக்கால் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் பல வகுப்புகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவா்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். இந்த விவகாரங்களில் புதுவை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி போா்க்கால அடிப்படையில் தீா்வு காணவேண்டும். இல்லாதபட்சத்தில் காங்கிரஸ் கட்சி புதுவை அரசைக் கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடும் என்றாா்.