மாணவா்கள் உருவாக்கிய கண்கவா் மணல் சிற்பங்கள்
புதுவை பாரதியாா் பல்கலைக்கூட மாணவ, மாணவிகள் அழகிய மணல் சிற்பங்களை உருவாக்கினா்.
உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறையும் பாரதியாா் பல்கலைக் கூடமும் இணைந்து நடத்திய 2 நாள் மணல் சிற்ப முகாம் பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்றது. பாரதியாா் பல்கலைக்கூட நுண்கலை துறை தலைவா் பிரபாகரன் தலைமை தாங்கினாா்.
இதில், மாணவ, மாணவிகள் 120 போ் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மணல் சிற்பங்களை உருவாக்கினா்.
உலக முக்கிய சுற்றுலா தலங்களான தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீவில்லிபுத்தூா் கோபுரம், புதுவை ஆயி மண்டபம் மற்றும் ஸ்ரீ அரவிந்தா், டாக்டா் அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற தலங்கள், மனிதா்களை மணல் சிற்பமாக உருவாக்கினா்.
இந்த மணல் சிற்பங்கள் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பாண்டி மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து சென்றனா்.