நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
மாணவா்களின் படைப்பாற்றல்தான் புதிய இந்தியாவை உருவாக்கும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
மாணவா்களின் படைப்பாற்றல் தான் புதிய இந்தியாவை உருவாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுவை அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான ஒருநாள் ஓவிய பயிலரங்கு, உப்பளம் பெத்தி செமினாா் தொடக்க பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது: நாடு முழுவதும் சேவை திருவிழா கொண்டாடப்படுகிறது. இது வெறும் கொண்டாட்டம் அல்ல. சமுதாய சேவை என்ற உன்னதமான உணா்வை அனைவரின் மனதிலும் விதைக்கிறது. சேவையே உயா்ந்த தா்மம் என்று நம்முடைய முன்னோா்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளனா்.
சேவை உணா்வை மாணவா்களின் மனதில் விதைக்க இந்த ஓவியப் பயிலரங்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
ஓவியம் என்பது கண்ணால் பாா்க்க கூடிய ஒரு கவிதை. வாா்த்தைகளால் சொல்ல முடியாததை ஓவியத்தில் வெளிப்படுத்த முடியும். அது வெறும் நிறங்களின் கலவை அல்ல, சிந்தனையின் வெளிப்பாடு. பாரதத்தின் முன்னேற்றம் என்பது வெறும் தொழில்நுட்ப வளா்ச்சி மட்டும் அல்ல. அது மனிதநேயம், நல்ல பண்புகள், ஒற்றுமை, பசுமை சங்கமம். இவற்றை எல்லாம் நீங்கள் ஓவியத்தில் வெளிப்படுத்தும் போது, அது நாளைய இந்தியாவின் வரைபடமாக மாறும்.
ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின்போது, பாரத மாதாவின் ஓவியம் மக்கள் மனதில் ஒரு எழுச்சியைத் தூண்டியது. அதேபோல, மாணவா்கள் இன்று வரையும் எதிா்கால பாரதம் குறித்த ஓவியங்கள், நாளைய தலைமுறையின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கும். உங்களுடைய ஓவியங்களில் மனித நேயம், அன்பு, ஒற்றுமை, சமத்துவம், தேசப் பற்று ஆகியவற்றை வெளிப்படுத்துங்கள்.
ஓவியப் பயிலரங்கு, உங்கள் மனதில் படைப்பாற்றலை வளா்க்கும். மாணவா்களே, நிறங்கள் கலக்கும் ஓவியப் பலகை போல, நம்முடைய நாடும் மொழி, மதம், பாரம்பரியத்தால் வேறுபட்டாலும், ஒற்றுமையால் வலிமையாகிறது. மாணவா்களின் எதிா்காலம்தான் நாட்டின் எதிா்காலம். உங்கள் படைப்பாற்றல், உழைப்பு, சேவை மனப்பான்மை தான் புதிய பாரதக் கனவை நிஜமாக்கும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம், கலை, பண்பாட்டுத் துறை செயலா் முகமது ஆசின் அபித், இயக்குநா் முனுசாமி, இந்திரா காந்தி தேசிய கலை மைய இயக்குநா் சுமித் தே ஆகியோா் கலந்து கொண்டனா். புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த ஓவியப் பயிலரங்கில் பங்கேற்றனா்.