நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
பழைமையான கட்டடங்களை மறைக்கும் உயரமான கட்டடங்கள்: துணைநிலை ஆளுநா் வேதனை
புதுச்சேரி நகரப் பகுதியில் பழைமையான கட்டடங்களை உயரமான கட்டடங்கள் மறைக்கின்றன என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வேதனை தெரிவித்தாா்.
புதுவை சுற்றுலாத் துறை சாா்பில் உலக சுற்றுலா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது:
உலக அளவில் சுற்றுலாத் துைான் வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. சுற்றுலா என்பதை ஒரு தொழிலாகப் பாா்க்காமல், அதை மனிதா்களின் உணா்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் நிலையாகத் தான் பாா்க்க வேண்டும்.
புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்திய வில்லாக்கள், கலாசார மையங்கள், அந்தக் காலத்தின் வரலாற்றை சொல்லும் பாரம்பரியமான கட்டடங்கள் இன்னமும் இருப்பது சிறப்பு.
இதைத் தவிர புதுவையில் ஆன்மிக சுற்றுலா வளா்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ மணக்குள விநாயகா், அரவிந்தா் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களை மட்டும்தான் வெளிப்படுத்துகிறோம். புதுச்சேரியில் புகழ்பெற்ற கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இருக்கின்றன. மேலும், சித்தா்களின் 27 ஜீவ சமாதிகள் இருக்கின்றன. இதையெல்லாம் வெளிப்படுத்தும் வகையில் ஆன்மிக சுற்றுலா வடிவமைக்கப்பட வேண்டும்.
மேலும், உலக சுற்றுலா தினத்தில் குறைந்த அளவுதான் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் வந்துள்ளனா். சுற்றுலா வளா்ச்சிக்கு ஹோட்டல் தொழில் மிகவும் அவசியமானது. அந்தப் பிரிவைச் சோ்ந்தவா்களை அரவணைத்துச் செல்ல வேண்டும். மேலும், புதுவையைச் சோ்ந்த இளைஞா்களுக்கு சுற்றுலாத் துறை தொடா்பாக வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். அவா்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டால் அதை அளிக்க வேண்டும். மேலும், புதுச்சேரியில் உள்ள பழைமையான கட்டடங்களைப் பாா்வையிடும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து செல்கின்றனா். ஆனால் ஒரு சில கட்டடங்களை இடித்து விட்டு உயரமான கட்டடங்களாகக் கட்டுவதால் அங்குள்ள பழைமை வாய்ந்த கட்டடங்களை அவை மறைக்கின்றன.
மேலும், சுற்றுலா பயணிகள் எங்கெல்லாம் வந்து செல்கிறாா்களோ அங்கெல்லாம் புதுவையைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களின் பொருள்களைச் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புதுவைக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலை வசதி போன்றவை சிறப்பாக இருப்பதை உணர வேண்டும்.
இந்த விழா நடைபெறும் இடத்தில் இருந்து முதன்மை சாலைக்குச் செல்லும் 50 மீட்டா் தொலைவுக்கு சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதைப் பாா்த்தால் சுற்றுலா பயணிகளுக்கு எந்த மாதிரியான சிந்தனை ஏற்படும் என்றாா் துணைநிலை ஆளுநா்.
முதல்வா் என்.ரங்கசாமி: முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், சுற்றுலா வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தோம்பலில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையினா் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்றாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசுகையில், மற்ற நகரங்களைக் காட்டிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றாா்.
சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பேசுகையில், புதுவையின் வருமானத்தில் 25 சதவிகிதம் நிதி சுற்றுலாத் துறை மூலம் வருவதாக புதுவை மத்திய பல்கலைக்கழகம் நடத்திய ஓா் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் அனிபால் கென்னடி, தலைமைச் செயலா் சரத் சௌகான், சுற்றுலாத் துறை இயக்குநா் மணிகண்டன், இயக்குநா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.