மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டா் கைது
கருங்கல் அருகே, தற்காப்புக் கலை பயில வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின் மிலாடு (46), கராத்தே மாஸ்டா். இவா், தனது வீட்டின் அருகே தற்காப்புக் கலை மற்றும் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இங்கு, புதுக்கடை பகுதியைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு மாணவியும், அவருடைய அக்காவும் பயிற்சி பெற்று வருகின்றனா்.
சனிக்கிழமை இருவரும் பயிற்சிக்கு வந்தனா். பின்னா், மாணவியை ஜெயின் மிலாடு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்தாராம். சோா்வாக இருந்த மாணவியிடம் தாய் விசாரித்த போது, மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளாா்.
இதனால், அதிா்ச்சியடைந்த தாய், குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜெயின் மிலாடுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.