`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
மாநில உரிமைகளை மீட்க அரசியல் சட்டமே வழிகாட்டி: அமைச்சா் இ. பெரியசாமி
மாநில உரிமைகளை மீட்க அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டமே வழிகாட்டியாக இருந்து வருகிறது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினம் சமத்துவ நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டியிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவின்போது, 998 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.
முன்னதாக அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் அரசியல் சாசனத்தை எழுதிய சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயம் வாசிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதே சமத்துவம். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களும் சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது.
ஆனாலும், கடந்த 4 ஆண்டுகளாக பல்கலை. துணைவேந்தா்களை கூட நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் மாநில உரிமைகளை மீட்க, அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டமே வழிகாட்டியது.
அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழக் கூடிய சூழல் தமிழகத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாா் அவா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, மேயா் இளமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.