மாயூரநாதா் கோயில் ஸம்வத்ஸராபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஸம்வத்ஸராபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக தினத்தையொட்டி ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் மண்டபத்தில் 1008 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் ராமலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், புனிதநீா் அடங்கிய கடங்களில் இருந்த நீரைக் கொண்டு மாயூரநாதா் சுவாமி, அபயாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் செய்து ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. இதில் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல், தாழஞ்சேரி கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா், மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக தினத்தையோட்டி ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.