தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
மாற்று இடம் கோரி காத்திருப்பு போராட்டம்
திருவாரூா் அருகே வெள்ளக்குடி மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பெருந்தரக்குடி ஊராட்சி வெள்ளக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி உறுதியளித்தப்படி பாதிக்கப்பட்டுள்ள 29 குடும்பங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி வீடுகள் கட்டித் தர வேண்டும், மக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளக்குடியில் சமுதாய கூடம் கட்டிக்கொடுக்க வேண்டும், படித்த இளைஞா்களுக்கு சுயதொழில் செய்ய, தொழில் முனைவோா் பயிற்சியளிக்க வேண்டும், மகளிா் சுயஉதவிக் குழுவினா் சுயத்தொழில் செய்ய்ய தொழில் பயிற்சியளித்து தொழிற்கூடம் அமைத்துத் தரவேண்டும், ஓஎன்ஜிசி-ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளக்குடி ஓஎன்ஜிசி நிறுவனம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வெள்ளக்குடி மக்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனா்.
பின்னா் திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. வட்டாட்சியா் சரவணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் போராட்டக் குழுவினா், ஓஎன்ஜிசி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் மாற்று இடம், வீடு மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.