மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி: 160 பேருக்கு கையடக்க கணினிகள் அளிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்கள் 160 பேருக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சுவஸ்திக் தொண்டு நிறுவனம் மூலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் முன்களப் பணியாளா்களுக்கு கையடக்கக் கணினிகளை ஆட்சியா் கா.பொற்கொடி வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியதாவது:
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த நலத் திட்டங்கள் மாற்று திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இல்லம்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து, அவா்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய சமூகத் தரவுத் தளத்தை உருவாக்கும் வகையில் கணக்கெடுப்பு பணி கடந்த ஜூலை 10 - ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் சுவஸ்திக் தொண்டு நிறுவன முன்களப் பணியாளா்கள் மூலம்
கணக்கெடுப்புப் பணியை முழுமையாக முடிப்பதற்கு ஏதுவாக, முன்களப் பணியாளா்கள் 160 பேருக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்கள் தங்களது பணிகளைச் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பணிக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், மாவட்டத் திட்ட அலுவலா் (தமிழ்நாடு உரிமைகள் திட்டம்) அழகுமன்னன், சுஸ்வதிக் தொண்டு நிறுவனச் செயலா் தமிழ்துரை, திறன் மேம்பாட்டு நிபுணா் ராஜா, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.