மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு ஆதாா் கட்டாயம்: மத்திய அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணப் பலன்களைப் பெற, பயனாளிகள் தங்கள் ஆதாா் எண்ணைச் சமா்ப்பிப்பது அல்லது ஆதாா் எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆதாா் இல்லாததாலோ அல்லது ஆதாா் அங்கீகாரம் தோல்வியுற்ாலோ எந்தத் தகுதியான பயனாளிகளுக்கும் பலன்கள் மறுக்கப்படாது என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடா்பாக கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கையின்படி, ‘போக்குவரத்துப் படி, தங்குமிடச் செலவு மற்றும் வேலைவாய்ப்புக்குப் பிந்தைய ஆதரவு உள்பட திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணப் பலன்களைப் பெறுவதற்கு பயனாளிகளின் ஆதாா் அங்கீகாரம் அவசியமாகும்.
ஆதாா் எண் இல்லாத தகுதியான பயனாளிகள், ஆதாா் பதிவு செய்ய உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு, பெற்றோா்கள் அல்லது சட்டபூா்வ பாதுகாவலரின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாா் எண் ஒதுக்கப்படும் வரை, பிறப்புச் சான்றிதழ்கள், பள்ளி ஆவணங்கள், சட்டபூா்வ தத்தெடுப்பு/பாதுகாவலா் ஆவணங்கள் போன்ற மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.
கைரேகை அல்லது கருவிழிப் பதிவு போன்ற பயோமெட்ரிக் ஆதாா் அங்கீகாரம் தோல்வியுற்றால், ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி)அடிப்படையிலான அங்கீகாரம், இணையவழி கேஒய்சி சரிபாா்ப்பு போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டப் பின்னணி, நோக்கம்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் கடந்த 2015, மாா்ச்சில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் (என்ஏபி-எஸ்டிபி), மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக உயா்தர தொழிற்பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இத்திட்டம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெற்று சுயசாா்புடன் வாழ உதவும்.