மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வள்ளியூரில் ரூ.30 கோடி மதிப்பிலான மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
முன்னதாக, வள்ளியூா் பேருந்து நிலையத்தில் இருந்து களக்காடு, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாபநாசம் வரையில் செல்லும் புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
பின்னா் ரூ.12.13 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வள்ளியூா் புதிய பேருந்துநிலைய கட்டுமானப் பணியையும், ரூ.6.03 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள தினசரி சந்தையில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் ஆய்வு செய்தனா்.
பின்னா் பேரவைத் தலைவா் கூறியது: தமிழக முதல்வா், வள்ளியூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வள்ளியூரில் ரூ.30 கோடி செலவில் அனைத்து வசதிகள் நிறைந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை கட்டி வருகிறது.
இங்கு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செயல்படும். கட்டுமானப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மருத்துவதுறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
பின்னா் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு முதல்வாால் வழங்கப்பட்ட மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் ஒப்படைத்தனா்.
இந்நிகழ்ச்சிகளில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் லதா, மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணி, தி.மு.க மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.