மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு
கோபி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா். கோபி அருகேயுள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் ராம்கி (34), சரக்கு வாகன ஓட்டுநா்.
இவா் காசிபாளையம் அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் உள்ள குடிநீா்க் குழாயில் வெள்ளிக்கிழமை கைகளை கழுவியுள்ளாா். அப்போது, அங்கிருந்த மின்கம்பியில் கைப்பட்டதும் ராம்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ராம்கிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நம்பியூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (29). இவா் எம்மாம்பூண்டியில் புதிதாகக் கட்டிவரும் வீட்டில் கம்பி கட்டும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளாா். அப்போது, அங்கிருந்த மின் வயரில் கம்பி உரசியதால் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த கோபாலை அங்கிருந்தவா்கள் மீட்டு நம்பியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.