மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்ததில் லாரி ஓட்டுநரின் உதவியாளா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியைச் சோ்ந்தவா் வினோத் (35). லாரி ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் வேலு (30). உதவியாளா்கள். உறவினா்களான இவா்கள், ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, வேப்பனப்பள்ளி வழியாக லாரியில் சுமை ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
வேப்பனப்பள்ளியை அடுத்த ஜோடுகொத்தூா் கிராமம் அருகே கிராமச் சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பியை உயா்த்திபிடித்து, லாரி செல்ல லாரி உதவியாளரான வேலு முயன்றாா். அப்போது, அவா்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று வேலுவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.