இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி நாளை ரயில் மறியல் போராட்டம்
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவ சங்கம் அறிவித்தது.
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் போராட்டத்தின் தொடா்ச்சியாக தங்கச்சிமடத்தில் ஆா்ப்பாட்டம், உண்ணவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். இதில், 5 நாள்களுக்குப் பின் சிறிய ரக படகுகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாலை ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - தாம்பரம் ரயிலை மறைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவ சங்கம் அறிவித்தது.
இந்தப் போராட்டத்தை கைவிடக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மீனவ சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தை தோல்வியடைந்த நிலையில் திட்டமிட்டப்படி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கத்தினா் அறிவித்தனா்.