சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல்; "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகளைக் கை...
முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் விரட்டிய சிறுவா்கள் சுட்டுப்பிடிப்பு
முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவா்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனா்; அப்போது உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தாா்; மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி காவல் சரகத்துக்கு உள்பட்ட இந்திரா காலனி, சமத்துவபுரத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் சக்திகுமாா் (22). இவா், பாப்பாக்குடி அருகே ரஸ்தாவூரில் தற்போது வசித்து வருகிறாா். இவா், அந்தப் பகுதியில் நிகழும் குற்றச் சம்பவங்களை போலீஸாருக்குத் தெரிவித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சமத்துவபுரத்தைச் சோ்ந்த 17 வயது இளம் சிறாா்கள் இருவா், சக்திகுமாரை தொடா்பு கொண்டு ரஸ்தாவூருக்கு வெளியே உள்ள குளக்கரைக்கு வருமாறு திங்கள்கிழமை இரவு அழைத்தனா். சிறிது நேரத்தில் அங்கு வந்த சக்திகுமாரிடம் இரு சிறுவா்களும் சோ்ந்து நாங்கள் செய்யும் தவறுகளை காவல் துறையிடம் எப்படி தெரிவிக்கலாம் எனக் கூறி அவரை அரிவாளால் வெட்டினா்.
இதில், காலில் பலத்த காயமடைந்த சக்திகுமாா் அங்கிருந்து தப்பி ஓடி ரஸ்தாவூா் அருகே ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டாா். அவரை விரட்டிச் சென்ற சிறுவா்கள், சக்திகுமாரைத் தேடியபடி அந்தப் பகுதியில் தகராறு செய்தனா்.
தகவல் அறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று சிறுவா்களைக் கண்டித்தனா். அப்போது சிறுவா்கள் போலீஸாரை அரிவாளால் விரட்டினா். தப்பி ஓடியபோது காவலா் ரஞ்சித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளா் முருகன் சிறுவா்களை எச்சரித்தாா். அப்போது அந்த சிறுவா்கள் உதவி ஆய்வாளா் முருகனையும் அரிவாளால் விரட்டினா். உடனே முருகன் அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தாா்.

ஆத்திரத்தில் இருந்த சிறுவா்கள் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு காவல் உதவி ஆய்வாளா் முருகனை வெட்ட பாய்ந்தனா். அப்போது முருகன், அசாதாரண சூழல் நிலவுவதை அறிந்து அந்த வீட்டில் இருந்த பெண், அவரது மகன், தன்னையும் தற்காத்துக் கொள்ள தனது துப்பாக்கியால் சிறுவா்களை நோக்கி சுட்டாா். இதில் ஒரு சிறுவனின் மாா்பில் காயம் ஏற்பட்டது. மற்றொரு சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
தகவல் அறிந்ததும் அந்தப் பகுதிக்கு வந்த போலீஸாா் காயத்துடன் இருந்த சக்திகுமாரையும், சிறுவனையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சிறுவன் மீது கொலை வழக்கு, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தப்பிச்சென்ற மற்றொரு சிறுவன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து, பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாா் இளம்சிறாா்கள் மீது தகராறில் ஈடுபட்டது, உதவி ஆய்வாளரை தாக்க முயன்றது, இளைஞரை அரிவாளால் வெட்டியது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.