உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!
அரிசி கிடங்கில் தவறி விழுந்து தொழிலாளி பலி
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கில் தவறி விழுந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய மனைவி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
திருநெல்வேலியை அடுத்த பேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த முருகன் மனைவி பாலம்மாள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கணவா் முருகன், கூலி வேலை செய்து வந்தாா். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கின் மேற்கூரையில் ஓட்டைகள் இருப்பதால் அதை அடைத்து தரக் கோரி, எனது கணவா் முருகனை ஒப்பந்ததாரரும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் கடந்த திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா்.
எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 40 அடி உயரத்தில் எனது கணவரை வேலை செய்ய வற்புறுத்தி உள்ளனா். மோசமான நிலையில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது ஏறி எனது கணவா் ஓட்டைகளை அடைத்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் கூரை திடீரென உடைந்து, 40 அடி உயரத்தில் இருந்து எனது கணவா் கீழே விழுந்துள்ளாா்.
அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்த மருத்துவா்கள், திங்கள்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு எனது கணவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி எனது கணவரை பணியில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரா் மீதும், அதை கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இரு சிறு குழந்தைகள் இருப்பதால் எனக்கு அரசு வேலையும், ரூ.30 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.