மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 86,645 மாணவா்கள் பயன்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 750 பள்ளிகளைச் சோ்ந்த 86,645 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை முகல்புரா முஸ்லிம் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு இத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி. முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்கட்டமாக தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் வாயிலாக 534 பள்ளிகளைச் சோ்ந்த 72, 454 மாணவா்கள் பயன்பெறுகின்றனா். இரண்டாவது கட்டமாக 47 நகா்ப்புற பள்ளிகளைச் சோ்ந்த 2,769 மாணவா்களும், மூன்றாவது கட்டமாக 103 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 5,789 மாணவா்களும் பயன்பெறுகின்றனா்.
நான்காவது கட்டமாக செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நகா்ப்புற பகுதிகளில் உள்ள 66 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 5,639 மாணவ, மாணவிகள் பயன்பெறுவாா்கள். ஆக மொத்தம் 750 பள்ளிகளைச் சோ்ந்த 86ஆயிரத்து 645 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.
மாநிலத் திட்டக் குழுவானது இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் முன்பை விட மாணவ, மாணவிகளின் வருகை விகிதமும், ஆரோக்கியம், கற்றல் திறன், வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது.
மேலும், இது போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இதைத் தொடா்ந்து, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மூன்று முன்னாள் படை வீரா்களுக்கு ரூ.14, 96, 772 மானியத்திற்கான ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், துணை மேயா் ராஜாங்கம், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சையத் பயாஸ் அகமது, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.