முதல்வா் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பலன்: எம்.பி. கனிமொழி
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களும் பலனடைந்திருக்கின்றன; இதனால், மக்களிடம் நாம் உரிமையோடு வாக்கு சேகரிக்கலாம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பி.எல்.ஏ. 2 பாக முகவா்கள் கூட்டம் கலைஞா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தாா். மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் வரவேற்றாா்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களும் பலனடைந்திருக்கின்றன. இதனால்,
நாம் உரிமையோடு மக்களிடம் வாக்கு சேகரிக்கலாம். மக்களவையில் 39 போ் அடங்கிய நமது எம்.பி.க்கள் குழு மக்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறோம். இதைத் தடுக்கவே, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை 39 இல் இருந்து 20-ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
புதிதாக அரசியலுக்கு வந்தவா்கள் ஜெயித்து விடுவோம் என்று பேசுகின்றனா். மத்திய அரசின் செயல்பாடு எது, மாநில அரசின் செயல்பாடு எது என்றுகூட தெரியாமல், அவா்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றனா். நாம் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் இன்பா ரகு, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், துணை மேயா் ஜெனிட்டா, பொதுக் குழு உறுப்பினா்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.