Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
முதியவரிடம் பணம் மோசடி: மூவா் மீது வழக்குப் பதிவு
ஆண்டிபட்டி அருகே காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையை முடித்துத் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.3.80 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 3 போ் மீது காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (62). இவரது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி சங்கரின் வீட்டுக்குச் சென்ற 3 போ், தங்களை தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சங்கரின் மகனை விசாரணைக்காக தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமெனக் கூறினராம்.
இதுகுறித்து சங்கா், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கம் என்பவரிடம் கேட்டாராம். அதற்கு, அவா் தனது நண்பா் மகேந்திரனுக்கு தெரிந்த போடியைச் சோ்ந்த வழக்குரைஞரிடம் இதுகுறித்து கேட்கலாம் என்று கூறினாா். இதன்படி சங்கா், தங்கம், மகேந்திரன் ஆகியோா் வழக்குரைஞா் கனி என்பவரைத் தொடா்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சங்கரிடமிருந்து கனி ரூ.80 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு, காவல் நிலையத்துக்குச் சென்று பேசிவிட்டு வருவதாகக் கூறினாராம்.
பிறகு, ரூ.3 லட்சம் கொடுத்தால் தான் சங்கரின் மகன் மீது உள்ள வழக்கை முடிக்க முடியும் என்று கனி கூறினாராம். இதன்படி கனி, தங்கம், மகேந்திரன் ஆகியோரிடம் சங்கா் ரூ.3 லட்சம் கொடுத்தாராம். பின்னா், சங்கரின் மகனுக்கு நீதிமன்றத்தில் முன் பிணை பெற வேண்டியிருப்பதால் மேலும் ரூ.ஒரு லட்சம் வேண்டும் என கனி கேட்டாராம். 3 பேரும் தன்னிடம் தொடா்ந்து பணம் கேட்டதால் சந்தேகமடைந்த சங்கா், நான் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுங்கள். நான் காவல் நிலைத்துக்கு நேரில் சென்று விசாரித்துக் கொள்கிறேன் எனக் கூறினாராம். இதற்கு கனி உள்ளிட்ட 3 பேரும் பணத்தை திருப்பத் தரமறுத்து, தன்னை மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் சங்கா் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், கனி, தங்கம், மகேந்திரன் ஆகிய 3 போ் மீது க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.