சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்...
முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்
நாகையில் இயற்கை மரணமடைந்த முன்னாள் வட்டாட்சியா் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சிவக்குமாா் (68). இவா் தனது இறப்புக்கு பிறகு தனது உடலை நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என குடும்பத்தினரிடம் தெரிவித்ததுடன், அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையிலும் உடல் தானப் படிவம் வழங்கியிருந்தாா்.
இந்நிலையில் ஆக.31-ஆம் தேதி சிவக்குமாா் இயற்கை மரணமடைந்தாா். இதையடுத்து அவரது உடலுக்கு உறவினா்கள் அஞ்சலி செலுத்திய பின்னா் குடும்பத்தினா் அவரது உடலை, நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். உடலை தானமாக பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழை மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி, சிவகுமாரின் குடும்பத்தினருக்கு வழங்கினாா். மேலும் தானமாக வழங்கப்பட்ட சிவகுமாரின் உடலுக்கு அவரது உறவினா்கள் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் மரியாதை செலுத்தினா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி கூறியது: உடல் தானம் என்பது மருத்துவக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு தெளிவான மருத்துவக் கல்வி கிடைப்பதோடு, சமூக நலனையும் முன்னெடுக்கிறது. அதேபோல உடல் உறுப்பு தானம் என்பது மற்றவா்களுக்கு வாழ்வு அளிக்கும் உன்னதமான செயலாக கருதப்படுகிறது என்றாா். நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.