மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்.20-க்கு மாற்றம்
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், இரண்டாவது செவ்வாய்க்கிழமை நாகை (ஒரத்தூா்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (செப். 5) நடைபெறவிருக்கும் மருத்து மதிப்பீட்டு முகாம், மிலாது நபி பண்டிகை அரசு விடுமுறை தினம் என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் செப்டம்பா் 20 ஆம் தேதி (சனிக்கிழமை) வேதாரண்யம் வட்டம் வானவன்மகாதேவி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவிருக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ நிபுணா்களும் கலந்து கொள்ள இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.