முன்வரிசையில் அமர சண்டை; திமுக பெண் நிர்வாகிகளிடையே கைகலப்பா? நடந்தது என்ன?
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 02-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பெண் நிர்வாகிகள் முதல் வரிசை இருக்கையில் அமர்வது தொடர்பாக அங்கேயே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகப் பேசும்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. மேலும், இந்த விவகாரம் காவல்நிலையம் வரை புகாராகச் சென்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "மகளிர் திறன் மேம்பாட்டு மைய திறப்பு விழாவுக்கு முதல்வர் சைதாப்பேட்டை வந்திருந்தார். மகளிருக்கான நிகழ்ச்சி என்பதால், மேடைக்கு முன்பாக பெண் நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. முன்வரிசையில் சைதை பகுதியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே முதல் வரிசையில் யார் அமர்வது என்பது குறித்து சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முதல் வரிசையில் இடம் இல்லாத நிலையில், தென்சென்னை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நிஷா சையது அங்கிருந்த மற்றொரு சேரை எடுத்துப்போட்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்திருக்கிறார்.
நிஷாவின் செயலை கண்டித்து அங்கிருந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அங்கே அமர்ந்திருந்த கலைஞர் நகர் வடக்கு பகுதி துணை செயலாளர் விஜயலட்சுமி என்பவருக்கும், நிஷாவுக்கும் வார்த்தை போர் முற்றியது. முதல்வர் வரும் சமயம் என்பதால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் பேசி இருவரையும் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, நிஷா, விஜயலட்சுமி ஆகிய இருவருமே விருகம்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ராஜா அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது எம்.எல்.ஏ அங்கு இல்லை. அந்த சமயத்தில் நிஷா, விஜயலட்சுமியுடன் ஒருசில கட்சி நிர்வாகிகளும் இருந்தார்கள். இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் முற்றிவிட்டது. அது ஒரு கட்டத்தில் கைகலப்பாகவும் மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கடைசியில் அங்கிருந்தவர்கள் இருவரையும் கட்டுப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்கள்" என்றார்கள் விரிவாக.
தாக்கப்பட்ட விஜயலட்சுமி இந்த விவகாரம் குறித்து 100-க்கு கால் செய்ததுடன், விருகம்பாக்கம் பகுதி காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சி.எஸ்.ஆர் போடாமல், இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசி அனுப்பிவைத்திருக்கிறது காவல்துறை" என்றார்கள் விரிவாக.
இதுகுறித்து விஜயலட்சுமி, நிஷா இருவரிடமும் பேசினோம், இருவருமே "இதுகுறித்து பேச விருப்பமில்லை. இதனைப் பெரிய செய்தி ஆக்க வேண்டாம்" என்று சொல்லி முடித்துவிட்டார்கள். சம்பவம் நடந்தது விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் அலுவலகம் என்பதால் அவரை தொடர்பு கொண்டு பேசினோம். "கைகலப்பு நடந்தது என்பதெல்லாம் உண்மையில்லை. இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒருகட்டத்தில் முற்றவே அங்கிருந்த கட்சியினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்கள். இது சொந்த கட்சி பிரச்னை. ஒரு குடும்ப பிரச்சனை போல நாங்களே பேசி தீர்த்துக்கொண்டோம்" என்றார் விளக்கமாக.
ஒன்றுமே நடக்கவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது ஏன்?