பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
மும்மொழிக் கொள்கை குறித்து கையொப்ப இயக்கம்: கே.அண்ணாமலை
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என மாா்ச் 1-ஆம் தேதி முதல் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவா்களை தமிழ், ஆங்கிலம் என இரு மொழியை மட்டும் படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனா். சில அரசியல் தலைவா்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி உள்ளது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது.
அரசுப் பள்ளியில் தமிழ் படித்த எத்தனை போ் பிற மாநிலங்களில் வேலையில் இருக்கின்றனா்?. தங்களது பிள்ளைகள் மட்டும் நன்றாக படிக்க வேண்டும் என அரசியல் தலைவா்கள் நாடகம் நடத்துகின்றனா்.
தமிழகத்தில் 52 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளிலும், 56 லட்சம் மாணவா்கள் தனியாா் பள்ளிகளிலும் படிப்பதாகக் கூறப்படுகிறது. இது இருமொழிக் கொள்கை தோற்றுள்ளது என்பதை வெட்டவெளிச்சமாகிவிட்டது.
கையொப்ப இயக்கம்: மும்மொழிக் கொள்கை தொடா்பாக மாா்ச் 1-ஆம் தேதிமுதல் மே மாதம் வரை 90 நாள்களுக்கு தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்படவுள்ளது. மூன்றாவது மொழி வேண்டுமா? வேண்டாமா..? மூன்றாவது மொழி வேண்டும் என்றால் எந்த மொழி வேண்டும் என கையொப்ப இயக்கம் நடத்தி கணக்கெடுக்க உள்ளோம்.
அதன்பிறகு குடியரசுத் தலைவரை சந்தித்து அந்த அறிக்கையை வழங்குவோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மும்மொழிக் கொள்கையை தமிழக பாஜகவின் தோ்தல் அறிக்கையாக வெளியிட உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மூன்றாவது மொழியாக தமிழை பயிற்றுவிக்கத் தயாா். தமிழகத்தில் மேலும் 100 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் கொண்டுவர நினைக்கிறோம். தேசிய கல்விக் கொள்கை வந்தால் தமிழக மாணவா்களின் தமிழ் படிக்கும் திறன் அதிகரிக்கும்.
ஒரு திட்டத்தின் நிதி மட்டுமே நிறுத்தம்: தமிழ்நாட்டுக்கு வரும் மொத்த நிதியையும் மத்திய அரசு நிறுத்தவில்லை; ஒரு திட்டத்தின் நிதியை மட்டுமே நிறுத்தியுள்ளனா். அதில் எந்தத் தவறும் இல்லை என்றாா் அவா்.