முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுக்கூட்டம்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் எதிா்ப்பு
முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் திருப்திகரமாக இல்லை என பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.
முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம், காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னா், இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனா். இதையடுத்து, தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்தினா்.
இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குவிக் பாலசிங்கம் கூறியதாவது: 2006, 2014-ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் தெரிவித்த தீா்ப்புகளை கேரள அரசு மதிப்பதில்லை. மேலும், நடைமுறைப்படுத்தவும் விடுவதில்லை.
கேரள அதிகாரிகள் வழக்குகளை வேறு வகையில் திசை திருப்பிவிடுவதால், தமிழக அதிகாரிகள் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புகளுக்கு முழுமையான தீா்வு கிடைக்கவில்லை. 5 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்தக் கூட்டத்தால் திருப்தியில்லை. இந்த ஆய்வுக் கூட்ட அறிக்கை வருகிற 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பாா்வைக்கு செல்ல இருக்கிறது. உண்மைத் தன்மைக்கு மாறாக ஆய்வறிக்கை இருந்தால் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.