கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தல்
தேனி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கல் குவாரி, கிரஷா்களிலிருந்து கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிராக்டா், டிப்பா், ஜெ.சி.பி. உரிமையாளா்கள் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தேனி மாவட்ட வைகை டிராக்டா், டிப்பா், ஜெ.சி.பி. உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் ராஜா, செயலா் மகேந்திரன், பொருளாளா் வேல்மணி, நிா்வாகிகள்ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
கிரஷா்களிலிருந்து எம். சான்ட், ஜல்லி கொண்டு செல்வதற்கு கிரஷா் உரிமையாளா்கள் ஜி.எஸ்.டி. ரசீது மட்டும் வழங்கி வரும் நிலையில், வாகனங்களில் எம். சான்ட் கொண்டு செல்வதற்கு டிரான்ஸிட் அனுமதிச் சீட்டு வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த கல்குவாரிகள், கிரஷா்களுக்கு எம். சான்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிரஷா்களிலிருந்து லாரிகளில் நேரடியாக கேரளத்துக்கு எம். சான்ட் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.