தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
போடி அருகே தனியாா் தோட்டத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
போடி அருகே போ. அம்மாபட்டி, இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த குருசாமி மகன் முருகன் (56). இதே பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் ஜெகதீஸ்வரன் (41). இருவரும் குரங்கணி அருகே ஊத்தாம்பாறை சாலையில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், ஜெகதீஸ்வரன் தோட்டத்தில் தென்னை மரத்திலிருந்து உதிரும் தேங்காய்களை எடுத்து தோட்ட உரிமையாளருக்குத் தெரியாமல் தன்னிச்சையாக விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தோட்ட உரிமையாளரிடம் கூறி விடுவதாக ஜெகதீஸ்வரனை, முருகன் எச்சரித்தாா்.
இந்தப் பிரச்னையில் கடந்த 2022, மாா்ச் 31-ஆம் தேதி முருகன், ஜெகதீஸ்வரன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெகதீஸ்வரன், முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெகதீஸ்வரனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா் நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன்.